தூரத்திலிருந்து!

“என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” (சங். 139:2).

கர்த்தர் பரலோகத்தில் வாசம் செய்தாலும், அவர் நம்முடைய எண்ணங்களையும், நினைவுகளையும், யோசனைகளையும் கூட தூரத்திலிருந்து அறிகிறார். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. “மேட்டிமையானவனையோ, தூரத்திலிருந்து அறிகிறார்” (சங். 138:6). கர்த்தர் சிருஷ்டித்த கழுகைப் பாருங்கள். அது ராஜரீக பறவையாயிருந்து, மகா உயரமான உன்னதங்களிலே பறக்கிறது. ஆயினும், அதனுடைய கண்கள் கூர்மையானதாய் இருக்கிறபடியால், பூமியிலுள்ள ஒரு சுண்டெலியைக்கூட அது தெளிவாய் பார்க்கக்கூடியதாயிருக்கிறது.

வேதம் சொல்லுகிறது, “அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்” (யோபு 39:29). ஆகவே தேவபிள்ளைகளே, நீங்கள் உங்களது எண்ணங்களையும், சிந்தைகளையும் குறித்து கவனமாயிருக்க வேண்டும். “சகல எண்ணங்களையும் சகல சேகைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால், சன்மார்க்கனையும், துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் (பிர. 3:17).

ஒரு சகோதரியை எனக்குத் தெரியும். அவளுடைய எண்ணங்களில் சாத்தான் ஊடுருவினான். “நீ தற்கொலை செய்து தான் மரிப்பாய்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். அவர்கள் அதை சாதாரணமாக எண்ணிக்கொண்டார்கள். அந்த எண்ணத்தைக் கொண்டு வருகிற பிசாசை அதட்டவில்லை, துரத்தவில்லை. அந்த எண்ணங்கள் வந்தபோது, இயேசுவின் இரத்தம் என்று சொல்லி இரத்தக் கோட்டைக்குள் தன்னை மறைத்துக்கொள்ளவில்லை. ஆகவே, தற்கொலை எண்ணங்கள் நாளுக்கு நாள் வலுக்க ஆரம்பித்தது.

“என்னுடைய அருமை ஒருவருக்கும் தெரியவில்லை. நான் செத்தால் தான் என் மேன்மையை வீட்டிலுள்ளவர்கள் புரிந்துக்கொள்ளுவார்கள்” என்றார்கள். தன் கணவனைப் பார்த்து, “என் முடிவு சீக்கிரமாய் இருக்கும். நான் தற்கொலை செய்து மரிக்கப்போகிறேன்” என்று பேச ஆரம்பித்தார்கள். அவரும் அந்த வார்த்தைகளைக் கடிந்துக்கொள்ளவில்லை. “இப்படி பேசாதே” என்று எச்சரிக்கவும் இல்லை. ஒருநாள் அந்த சகோதரியின் கணவன், வேறொரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், அதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று சாத்தான், அந்த மனைவியை தூண்டிவிட்டான். அந்த ஏவுதலினாலே, அவள் வீட்டிற்குள்ளே போய் தன்மேல் எண்ணெய் ஊற்றி தீ வைத்து, மரித்துப்போனாள்.

அப்படிப்பட்ட தீமையான சிந்தனைகளையும், பொல்லாத சிந்தனைகளையும் முளையிலே கிள்ளி எறியுங்கள். உங்களுடைய உள்ளத்தில் வேர்விட்டு, பெலனடையும் வரை காத்திருக்காதிருங்கள். ஒரு தோட்டத்தில் காஞ்சொறி செடிகள் ஏராளமாய் முளைத்தன. அதனுடைய விதைகள் தோலில் பட்டுவிட்டால் தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். அதை வெட்ட, திரும்பவும் துளிர்த்துக் கொண்டே வந்தது. ஆகவே தீ வைத்தார்கள். அது மறைந்திருக்கிற வேர்களுக்குள்ளாகச் சென்று திரும்பவும் அது துளிர்க்காதபடி தடுத்துவிட்டது. அதுபோல தீய எண்ணங்கள் வரும்போது உங்களுக்குள்ளே அக்கினி அபிஷேகத்தை கொண்டு வாருங்கள். பரிசுத்த ஆவியின் உதவியால், தீய எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சோல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்” (யாக். 1:13,14).