சிந்தையை ஆராய்ந்து பாரும்!

“தேவனே, என்னை ஆராந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்” (சங். 139:23).

நான் என்னை ஆராய்ந்தது போதாது. ஆண்டவரே நீரே என்னை ஆராய்ந்து பாரும். என்னுடைய தவறுகள், சிந்தைகள் எனக்கு தெரியாமலிருக்கலாம். ஆனால், உம்முடைய பார்வையில் அவைகள் மறைவானவைகள் அல்லவே. நீ காண்கிறபடி நான் காணும்படி எனக்கு என்னை காண்பித்தருளும். ஆண்டவரே, என் இருதயத்தையும், மனதின் சிந்தைகளையும் ஆராய்ந்து அறிகிறவர் நீரே. வேதனைகளை உண்டாக்கும் வழிகளை என்னை லிட்டு நீக்கியருளும். நித்தியமான வாழ்க்கையிலே, நான் உற்சாகமாய் செல்ல என் சிந்தனைகளை சீர்படுத்தும்.

பாருங்கள், ஒரு அறைக்குள்ளே மிக சிறியதான ஏராளமான தூசிகள் மிதந்துக்கொண்டிருக்கும். அவைகளை உங்களுடைய வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஒருவேளை வீட்டின் மேலிருக்கும் ஒரு துவாரத்தின் மூலமாக சூரிய ஒளி அறை வீட்டிற்குள் வரும் என்றால், அந்த ஒளியிலே மிதந்துக்கொண்டிருக்கும் ஏராளமான தூசிகளைப் பார்க்க முடியும். அதுபோலவே உங்களுடைய சிந்தைகளை வெறும் கண்களால் காணமுடியாது. பரிசுத்த ஆவியானவருடைய ஒளி இருதயத்தில் வீசும்போது, உள்ளத்திலிருக்கிற தீய எண்ணங்களையும், தீய சிந்தைகளையும் அடையாளம் கண்டுபிடித்து, அகற்ற முடியும்.

ஏசாயா ஒரு பெரிய தீர்க்கதரிசி தான். முதல் ஐந்து அதிகாரங்களில், “உனக்கு ஐயோ, உனக்கு ஐயோ” என்று அநேகரை குற்றப்படுத்தி, அவர்களுக்கு “ஐயோ” என்று சொல்லிக்கொண்டு வந்தார். ஆனால், ஏசாயா 6-ம் அதிகாரத்திற்கு வரும்போது, தேவ பிரசன்னத்திலே ஆவியானவருடைய வெளிச்சம் அவருடைய உள்ளத்தில் வீசினது, தன் குறையை கண்டுபிடித்தார். “எனக்கு தான் ஐயோ. ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்” என்று கதறினார் (ஏசா. 6:5). ஆகவே கர்த்தர் பலிபீடத்தின் அக்கினி குறட்டினால் அவருடைய நாவைத் தொட்டு அவரை பரிசுத்தப்படுத்தினார்.

இன்று அநேகர் தங்களுடைய சிந்தைகளை அறிந்தும், அறியாதவர்களைப்போல, தங்களை நீதிமான்களாக எண்ணிக்கொண்டு, மற்றவர்களை குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பரலோகமோ, அவர்களையே குற்றவாளிகளாக தீர்க்கிறது. தேவபிள்ளைகளே, உங்களுடைய சிந்தை எப்படியிருக்கிறது? உங்களை நீங்களே ஆராய்ந்து பார்ப்பதற்கு இது அருமையான தருணம். “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” (1 கொரி. 11:28,31).

சிலருடைய உள்ளத்தில் அக்கிரமமான சிந்தை இருக்கக்கூடும். “என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் சேவிகொடார்” (சங். 66:18). சிலருக்கு மாம்ச சிந்தையிருக்கக்கூடும். மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்திற்குரியவைகளை சிந்திக்கிறார்கள் (ரோம. 8:5). மாம்ச சிந்தை மரணம் (ரோம. 8:6). சிலருக்கு வீணான சிந்தைகள். மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல, நீங்கள் இனி நடவாமலிருங்கள் (எபே. 4:17). “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோம. 12:2).

நினைவிற்கு:- “இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்” (1 பேது. 4:1).