அக்கிரம சிந்தை!

“என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங். 66:18).

ஆண்டவர் எல்லாவற்றையும் ஒழுங்கும், கிரமமுமாக செய்கிறவர். கிரமத்துக்கு எதிர்பதம், அக்கிரமம். “ஒருவனுக்கு ஒருத்தி” என்பது கிரமம். இரண்டு, மூன்று மனைவிகளை வைத்துக்கொண்டு இருந்தால், அது அக்கிரமம். புருஷன் இருக்க இன்னொருவனோடு கள்ளத் தொடர்பு கொள்வது அக்கிரமம். மனச்சாட்சியை கொன்று, தேவ ஆலோசனையை மீறி, துணிகரமான பாவ செயல்களுக்கு ஈடுபடும்போது, அது அக்கிரமமாய் மாறுகிறது. ஒரு நாள் கர்த்தர் இவர்களைப் பார்த்து, “அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்றுபோங்கள்” (மத். 7:23) என்பார்.

நோவாவின் நாட்களிலும், சோதோம் கொமோராவின் நாட்களிலும் ஜனங்களின் அக்கிரமம் தேவ சமுகத்தை எட்டிற்று. அதினிமித்தம் நியாயத்தீர்ப்பு வந்தன. அதே நோவாவின் நாட்களில், மனிதனுடைய இருதயத்தின் நினைவுகளும் தோற்றங்களும்கூட நித்தமும் பொல்லாதவைகளாகவேயிருந்தது (ஆதி. 6:5).

தாவீது தன் வாழ்க்கைக்கு கர்த்தரை மேய்ப்பராய் கண்டு, “நான் தாழ்ச்சியடையேன்” என்று பாடினார். ஆனால் அவர் தன் எண்ணங்களுக்கும், சிந்தைகளுக்கும் கர்த்தரை மேய்ப்பராய் வைக்கவில்லை. ஆகவே அரண்மனைக்கு கீழே பத்சேபாள் என்ற பெண் குளித்துக்கொண்டிருந்த காட்சியை கண்டபோது, அவருடைய எண்ணங்கள் இச்சைகளுக்கும், சிற்றின்பங்களுக்கும் நேராக ஒடினது. இதனால் தாவீது, சாபங்களைப் பெற்றுக்கொண்டார்.

“எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், களவுளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்” (மத். 15:19). இவைகளே மனிதனை தீட்டுப்படுத்தும். நாத்தான் என்ற தீர்க்கதரிசி, தாவீதின் அக்கிரமத்தை உணர்த்தினபோது, தாவீது மனங்கசந்து அழுதார். “கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது. உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்” (சங். 25:11) என்று, கதறி கெஞ்சி கேட்டார். “என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்து போயிற்று. என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று” (சங். 31:10) என்றார்.

ஆகவே தன்னுடைய அக்கிரமத்தினால் வந்த குற்ற மனச்சாட்சியிலிருந்து விடுதலை பெறும்படி, கர்த்தருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி பாவ அறிக்கை செய்தார். “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்” (சங். 32:5). தாவீது கண்ணீரோடு, தன் அக்கிரமத்தை அறிக்கையிட்டு பாவ மன்னிப்புக்காக, ஜெபித்த ஜெபத்தை சங். 51-ல் வாசிக்கலாம். அந்த ஜெபம் கர்த்தருடைய உள்ளத்தை உருக்கிற்று. கர்த்தர் மனமிரங்கி, தாவீதை சுத்திகரித்து, மீண்டும் அரவணைத்துக்கொண்டார்.

ஒரு மரத்தில் பத்து அடி ஏறி விழும்போது, குறைவான அடிகள் படும். ஆனால் இருபது அடி, முப்பது அடி என்று மிக உயரத்தில் ஏறி விழும்போது, எலும்புகள் நொறுங்கும். பலத்த அடிபடும். மாதக்கணக்கில் ஆஸ்பத்திரியில் கிடக்க வேண்டியதிருக்கும். மிகுந்த வலியையும், வேதனையையும் சகிக்க வேண்டியதிருக்கும். அதுபோல ஆவிக்குரிய ஜீவியத்திலே உன்னத நிலைமைக்கு ஏறி விழும்போது, மாதக்கணக்கிலே கதற வேண்டியதுவரும்.

நினைவிற்கு:- “என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் பாவங்களைப் பராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்” (சங். 51:2,9).