சிந்தையை ஆயுதமாக!

“அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்” (1 பேதுரு 4:1).

உலகத்திலுள்ள போராட்டங்களில், அதிகமான போராட்டங்கள், யுத்தங்கள், சிந்தனையிலேதான் வருகிறது. இவை மனதிலே ஆரம்பமாகின்றன. ஆண்டவர் மனுஷனுக்கு கொடுத்த சிறந்த பாக்கியங்களிலே ஒன்று, சிந்திக்கிற திறமை. உருவாக்குகிற, அல்லது எண்ணுகிற திறமை. ஆனால், அதே சிந்தையை சாத்தான் பயன்படுத்தி, அநேகருடைய எண்ணங்களை குழப்பிக் கொண்டிருக்கிறான். பல பிரச்சனைகளை, ஜனங்கள் சிந்தித்து, சிந்தித்து எப்படி இந்த பிரச்சனைகளிலிருந்து வெளிவருவது என்பதைத் தெரியாமல் குழம்பிக் கொண்டேயிருக்கிறார்கள். பல அவமானங்களின் விளைவாக, “என்ன செய்வேன்?” என அறியாதவர்கள் தற்கொலையை நாடுகிறார்கள்.

சிலர் சிந்தையிலே வீணராகிறார்கள். சிலர் சிந்தித்து, சிந்தித்து, கவலைப்பட்டு பைத்தியக்காரர்களாகிறார்கள். ஆகவே, கோணலான சிந்தைகளை இயேசுவின் நாமத்திலே செவ்வைப்படுத்துவீர்களாக. உங்களுக்குள்ளே கிறிஸ்து இயேசு விலுள்ள சிந்தை இருக்குமானால், அமைதலுள்ள சிந்தையைக் கொண்டு வருவீர்கள். சிலருக்கு மனைவி பேரில் எப்பொழுதும் சந்தேகம். சில மனைவிமாருக்கு கணவன் எதைச் செய்தாலும், சந்தேகம். இந்த சந்தேகப்பேய், சிந்தையில் வந்து அநேக குடும்பங்களை பாழாக்குகிறது. ஆகவே, “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்” (எபேசி. 6:11).

அப். பவுல் சொல்லுகிறார், முதலாவது “சத்தியம்” என்னும் கச்சையாகும். அதை உறுதியாக உங்கள் அரையிலே கட்டிக்கொள்ளுங்கள். இரண்டாவது, “நீதி” என்னும் மார்க்கவசத்தைத் தரித்துக்கொள்ளுங்கள். மூன்றாவது, சுவிசேஷத்துக்குரிய “ஆயத்தம்” என்னும் பாதரட்சையை கால்களிலே தொடுத்துக்கொள்ளுங்கள் (எபே. 6:14,15). பெல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம், அவித்துப் போடத்தக்கதாய் எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” (எபே. 6:16,17).

இந்தப் போராயுதங்களை, முதலாவது நீங்கள் உங்கள் சிந்தையிலே தரித்துக் கொள்ளுங்கள். இவைகள் “மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்” (2 கொரி. 10:4,5).

ஆவிக்குரிய யுத்தத்திலே, நீங்கள் ஜெயம்பெற வேண்டுமென்றால், உங்ளுடைய உள்ளான மனிதனிலே பரிசுத்தம் இருக்க வேண்டும். உங்களுடைய இருதயத் துடிப்போடும், சுவாசத்தோடும் இயேசுவையும், அவருடைய நாமத்தையும், அவருடைய இரத்தத்தையும் இணைத்துவிடுங்கள். எப்போதும் குடும்ப ஜெபம் செய்துவிட்டு படுக்க செல்லுங்கள். அப்பொழுது எந்த செய்வினை வல்லமைகளும் பலிப்பதில்லை. உன்னதமானவருடைய மறைவிலே பாதுகாத்துக்கொள்ளப் படுவீர்கள்.

நினைவிற்கு:- “நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (சகரியா 2:5).