ஆவியின் சிந்தை!

“மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ, ஜீவனும் சமாதானமுமாம். எப்படி யென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை” (ரோம. 8:6,7).

மண்ணுக்குள், எப்படி ஒரு மரத்தின் வேர் மறைந்திருக்கிறதோ, அப்படியே மனிதனுக்குள் பாவ சிந்தை மறைந்திருக்கிறது. மறைந்திருக்கிற இந்த சிந்தையில் தான் இச்சைகள் கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கின்றன. பாவம் பூரணமாகும் போது, ஆத்துமா மரணமடைகிறது. “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசேக். 18:4). நீங்கள் சிந்தையிலே ஜெயமெடுத்தால்தான், உலகம், மாம்சம், பிசாசின்மேல் ஜெயமெடுக்க முடியும். உங்கள் எண்ணங்களுக்கு காவல் வைத்தால்தான், உங்களது பரிசுத்தத்தைப் பாதுகாக்க முடியும். அநேகர் ஜெபிக்க வரும்போது, “ஐயா, எனக்குள்ளே அசுத்தமான சிந்தை வருகிறது.

கெட்ட எண்ணங்கள் வருகின்றன. இதனால் பாவத்தில் விழுந்து விழுந்து எழும்புகிறேன்” என்றெல்லாம் வேதனைப்படுகிறார்கள். அப்படியே வாலிபரும் கூட, தறிகெட்டு தலைவிரி கோலமாய் ஓடுகிற, அசுத்த எண்ணங்களுக்கு அணை போடுவது எப்படி? நான் பரிசுத்தத்தை பாதுகாத்துக்கொண்டு, உண்மையாய் ஊழியம் செய்ய விரும்புகிறேன், என்றெல்லாம் சொல்லுகிறார்கள். வெற்றியுள்ள வாழ்க்கைக்கு வழிமுறை என்ன? முதலாவது தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் சிந்தனை ஒரு போர்க்களம். சாத்தான் முதலாவது உங்களை தாக்குவது, உங்களுடைய மனதிலுள்ள சிந்தனையைத்தான். அது ஒரு “கபாலஸ்தலம்” என்று சொல்லலாம். பாருங்கள்! குவைத் ஒரு சின்ன தேசம். ஆனால் அந்த தேசத்தில், ஒருபக்கம் ஈராக் தேசத்தைச் சார்ந்த சதாம் உசைனும், மறுபக்கத்தில் அமெரிக்காவைச் சார்ந்த ஜார்ஜ் புஷ்-ம் தங்களுடைய படைகளை கொண்டு வந்து இறக்கினார்கள்.

இதுபோல உங்களுடைய சிந்தையில் ஒருபக்கம் சாத்தானும், மறுபக்கம் கர்த்தருமாக நின்று, யுத்தம் செய்கிறார்கள். நீங்கள் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்பதில், கர்த்தருக்கு ஒரு நோக்கமுண்டு. அதே நேரத்தில், உங்களை பாவத்தில் வீழ்த்தி, நரகத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டும், என்று சாத்தான் விரும்புகிறான். அப். பவுல், சிந்தையை இரண்டு பகுதிகளாக பிரிக்கிறார். முதலாவது, மாம்ச சிந்தைக்கு பின்பாக சாத்தானும், மரணமும் நிற்கின்றன. அடுத்தது, ஆவியின் சிந்தை. அது ஜீவனும், சமாதானமுமாகும். அந்த சிந்தைக்குப் பின்பாக, கர்த்தரும், ஆவியானவரும் நிற்கிறார்கள். மாம்ச சிந்தை, தேவனுக்கு விரோதமான பகை ஏன் தெரியுமா? அதன்பின்பாக நின்று சாத்தான் கண்களின் இச்சையையும், ஜீவனத்தின் பெருமையையும் கொண்டு வருகிறான். அநேகர் இந்த இச்சைகளினால் நிரம்பி, வீண் மனக்கோட்டை கட்டி, கற்பனையிலே வாழ்ந்து, தீமையானவைகளை யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஆவியின் சிந்தையுள்ளவர்களோ, கர்த்தரைத் துதித்துக்கொண்டும், ஆவிக்குரிய பாடல்களைப் பாடிக்கொண்டும், வேத வசனங்களை தியானித்துக் கொண்டும் இருப்பார்கள். அப்பொழுது கெட்ட சொப்பனங்களையும், ஆபாச கனவுகளைக் கொண்டுவருகிற பிசாசின் கிரியைகளை, நீங்கள் முறியடிக்கலாம். பரிசுத்த ஆவியினால், பரலோக தரிசனங்களையும், சொப்பனங்களையும், வருங் காலத்தைக் குறித்த வெளிப்பாடுகளையும், தேவ சித்தத்தையும் கர்த்தர் உங்களுக்கு காண்பிப்பார்.

நினைவிற்கு:- “நான் உனக்கு போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8).